"A little progress everyday adds up to big results"

Saturday 27 June 2015

நவீன உலகில் லினக்ஸின் பங்கு

   நாம் கணினி உலகில் வாழ்ந்து வருகிறோம். கணினிகள் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு கணினியில் சரியான இயக்கத்திற்கு, இயக்க முறைமை (Operating System) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வின்டோஸ், லினக்ஸ், மேக் போன்ற பல இயக்க முறைமைகள் உள்ளன. நம் அனைவருக்கும் தெரிந்ததுபோல், தனிமனிதர்களால் பிரபலமாக பயன்படுத்தப்படும் இயக்க முறைமை வின்டோஸாக உள்ளது. ஆனால், கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் திறந்த மூல இயக்க முறைமைகளை (Open Source Operating Systems)  பயன்படுத்துகின்றன. லினக்ஸ், ஒரு திறந்த மூல இயக்க முறைமை, பல்வேறு நன்மைகள் உள்ளமையால் அது கணினி உலகத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வரம். சில நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பங்கு:
          லினக்ஸ் இயக்க முறைமையின் பயன்பாடு பின்வருமாறு பல பகுதிகளில் பயன்படுகின்றது.
1. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (Research and Development)
2. உலாவல் மையங்கள் (Browsing centers) (வைரஸ் பிரச்சனையிலிருந்து தங்கள் கணினிகளைப் பாதுகாக்க)
3. பல நிறுவனங்களின் நூலகங்கள்
4. கூகுள், விக்கிபீடியா போன்ற அமைப்புகள்.

1. வைரஸ் அற்றது:
          அதிகமான வைரஸ் உருவாக்குனர்கள் (developers) முக்கியமாக வின்டோஸ் சார்ந்த கணினிகளில் கவனம் செலுத்துவதால், லினக்ஸ் முற்றிலும் வைரஸ் அற்றது. லினக்ஸின் வைரஸ் அற்ற சூழலுக்கு மேலும் ஒரு காரணம் .exe கோப்புக்கள் லினக்ஸில்  நேரடியாக செயல்படுத்த முடியாது; மேலும் தொழில்நுட்பரீதியாக கூறவேண்டுமானால், லினக்ஸின் எதுவும் தாமாக இயங்கக்கூடியவையல்ல.

2. வன்பொருள் சாராதது:
          அனேகமான வின்டோஸ் பயனாளிகல் (பழைய வன்பொருளின் இருப்பால்), தங்கள் கணினியை சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்த முடியாமல் இருப்பர். ஆனால், லினக்ஸில் அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. எந்த பதிப்பும் எந்த வன்பொருளிலும் இயங்கக்கூடியது.

3. இலவசமாக கிடைக்ககூடியது:
          நிங்கள் ஒரு திருடப்பட்ட (வின்டோஸ்) இயக்க முறைமையை உங்கள் மடிக்கணினியில் வைத்துக்கொண்டு வெளிநாடு செல்கிறீர்கள் என வைத்துகொள்வோம். நீங்கள் திருடப்பட்ட (pirated) இயக்க முறைமையைப் பயன்படுத்துவதால் பிடிபடுவீர்கள். ஆனால், லினக்ஸ் இலவசமாக அனைவருக்கும் கிடைக்கிறது. எனவே, எந்தப் பிரச்சனையும் இருக்காது.

4. நெகிழ்வுத்தன்மை (Flexibility):
          நீங்கள் ஒரு நிரலாளரானால் (programmer), உங்கள் விருப்பத்திற்கேற்ப லினக்ஸை உங்களால் மாற்றியமைக்க முடியும். அதுவே, திறந்த மூலத்தின் சக்தியாகும். மேலும், இருக்கும் மூல நிரலைக்கொண்டு (source code) நீங்கள் ஒரு இயக்க முறைமையை உருவாக்கக் கற்றுக்கொள்ளலாம்.

5. பெயர்வுத்திறன் (Portability):
          ஒரு இயக்க முறைமையை நீங்கள் ஒரு நிரல் திரட்டியிலோ (Pen drive) அல்லது குறுந்தகட்டிலோ எடுத்துச் செல்லலாம் என்றால் நம்புவீர்களா? ஆம், லினக்ஸ் மிகச் சிறியதாக உள்ளதால், நீங்கள் அதை ஒரு குறுந்தகட்டிலேயே அடக்கிவிடலாம். உங்கள் கணினியில் நிறுவாமலேயே, குறுந்தகட்டிலுள்ள நேரடி இயக்க முறைமையைக் (Live OS) கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.

6. குறைந்த செயலிழக்கம்:
          வின்டோஸ் பயனர்கள் அனேக நேரங்களில் முறைமை செயலிழக்கத்திற்கு வருத்தப்படுவதுண்டு. ஆனால், லினக்ஸில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லை.

7. விரைவான செயலாக்கம்:
          நீங்கள் ஒரு வின்டோஸ் பயனராக இருந்து தற்பொழுது லினக்ஸ் பயன்படுத்தி வருபவரானால், லினக்ஸில் வேகத்தை நீங்கள் மெச்சுவீர்கள் என்று என்னால் உறுதியாகக் கூற இயலும். துவங்குவதற்கும், நிறுத்துவதற்கும் அது நேரமெடுப்பதில்லை.

8. பாதுகாப்பு:
          நீங்கள் வின்டோஸ் சூழலில் இணையத்தில் உலாவும்போது, பல ஹேக்கர்கள் உங்களைப் பார்ப்பதற்கும், உங்கள் தரவுகளைத் (data) திருடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவை யாவும் வின்டோஸின் கட்டமைப்பால் எளிதாகச் செய்ய முடியும். ஆனால், லினக்ஸில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் குறைவாகவே காணப்படுகின்றன.

9. பன்மொழி ஆதரவு:
          அனேக லினக்ஸ் பகிர்மானங்கள் பன்மொழி ஆதரவுடன் கிடைப்பதால், ஒரு சாதாரன மனிதன் கூட கணினியைப் பயன்படுத்த இயலும். வாக்கியங்கள் உலகெங்கும் வசிக்கும் மக்களால் மொழிமாற்றமும் திருத்தமும் செய்யப்படுகின்றன.

10. மிகப்பெரிய சமூகம்:
          லினக்ஸ் உருவாக்குனர்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ளமையால், உங்களுக்கு வேண்டுவதை எளிதாக இணைய கருத்துக்களங்களின் (forums) மூலம் பெற முடியும்.

11. இயக்கிகள் தேவையில்லை:
          வின்டோஸ் தளத்தின் மேல் லினக்ஸின் மேலுமொரு நன்மை என்னவென்றால், லினக்ஸ் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சாதன இயக்கிகளை நிறுவுமாறு தொல்லை செய்யாது.

12. எல்லா மென்பொருள்களும் ஓரிடத்தில்:
          மென்பொருள் மையத்தில், எல்லா மென்பொருள்களையும் ஒரு சொடுக்கில் (click) பெறலாம்.

13. நன்கு பிரிந்த கெர்னல்:
          கெர்னலும், பயனர் இடைமுகமும் (user interface) நன்கு பிரிக்கப்பட்டுள்ளமையால், (ஃபெடோரா, சென்ட்ஓஎஸ், உபுண்டு, போன்ற) நிறைய பகிர்மானங்களும் (distributions), (குபுண்டு, எடுபுண்டு, போன்ற) பல வகைகளும் லினக்ஸில் சாத்தியமாகியிருக்கிறது.

14. செயல்பாட்டு மென்பொருள்களை உள்ளடக்கியது:
          வின்டோஸ் நிறுவிய உடன் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு நீங்களே நிறுவும்வரை உங்களுக்குக் கிடைக்காது என்றிருக்க, லினக்ஸில் லிபரே ஆபீஸ், ஓப்பன் ஆபீஸ், ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

15. புதுப்பிக்கப்பட்டது:
          (C, C++, போன்ற) எல்லா நிரலாக்க மொழிகளின் மேம்படுத்தல்கள் முதலில் லினக்ஸிலேயே கிடைக்கும். பழைய 'டர்போ C++ IDE' (புதிய C++11 ஆதரிக்கும்) விதிவிலக்கு கையாளுதல் மற்றும் மரையிடுதல் (multi-threading) ஆகியவற்றை ஆதரிக்காது.

நாம் சிறந்த இயக்க முறைமையை புரிந்து அதனையே பயன்படுத்துவோம்;

நாம் கணினி உலகில் ஒரு புரட்சியை உருவாக்குவோம்!