"A little progress everyday adds up to big results"

Monday, 25 November 2013

யாருக்குத்தான் இல்லை தாய்ப்பாசம்!

                        என் இல்லத்தருகே புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வந்தது. அங்கே சில தெரு நாய்களும் குடியிருந்தன. ஒருமுறை அவற்றுள் ஒரு நாய் (பெயர்: அம்மு) சில குட்டிகளை அந்த வீட்டிற்குள் ஈன்றிருந்தது. அந்த கட்டப்பட்டு வந்த வீட்டு இரவு நேர காவல்காரர் தினமும் காலை 6 மணியளவில் வீட்டினைப் பூட்டிச்செல்வது வழக்கம். பின் வீடு கட்டுவோர் காலை 9 மணியளவில் மற்றொரு சாவியை வைத்து திறந்து, கட்டிடப் பணியில் ஈடுபடுவர். 2013ம் ஆண்டு நவம்பர் திங்கள் 16ம் தேதி புயல் காரணமாக சேலத்தில் தொடர்மழை பெய்தது. அதனால் வீடு கட்டுவோர் அன்று வரவில்லை.

                             அவ்வளவுதான்! தன் பிள்ளைகள் வீட்டினுள் இருக்க, வீடு பூட்டியிருப்பதைக் கண்டு அம்மு துடிதுடித்துப் போய்விட்டது. காலை சுமார் 10 மணி முதல் தொடர்ந்து (அழுவும் தோணியில்) ஊளையிட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், மக்களுக்கு எங்கே புரியும் அதன் பரிதவிப்பு? என் அன்னையும் நானும் அதற்குப் பசிக்கின்றது என்று எண்ணி, ஒரு தட்டில் சிறிதளவு அது எப்பொழுதும் விரும்பி சாப்பிடுகிற தயிர் சாதம் வைத்தோம். ஆனால், அதன் கதறல் ஓயவில்லை. பின்னர், அது வீட்டின் கதவைப் பார்த்துப் பார்த்து ஊளையிடிவதை வைத்து நான், அது தன் பிள்ளைகள் வீட்டினுள் இருக்க, தன்னால் உள்ளே செல்ல முடியாததை எண்ணி பரிதவிக்கிறது என்றுணர்ந்தேன்.

                         என் அன்னையிடம் நான் அதன் கவலையை விவரித்தேன். ஆனால், எங்களால் அப்பொழுது எதுவும் செய்ய முடியவில்லை, ஏனென்றால், எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காவல்கரரின் கைபேசி எண்ணும் எங்களிடத்தில் இல்லை. அதன் பாசத்தைப் பார்த்து எங்களால் அனுதாபப்பட மட்டுமே முடிந்தது. நேரம் மதியம் 2. எனினும் கதறல் ஓயவில்லை. பரிதாபம் பதறித்துடிக்கும் பெரிய நாயின்மீது மட்டுமல்ல; பசியால் பட்டினியில் பரிதவிக்கும் அதன் பிள்ளைகள் மீதும்தான்! என் மனது ஏதேனும் செய்யவேண்டும் எனத்துடித்தது. அதே சமையத்தில் என்ன செய்வதென்றும் புரியவில்லை.

                         இனி மனிதர்களிடம் முறையிட்டு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று உணர்ந்த அம்மு, இறுதியில் அந்த வீட்டு கதவருகே இருந்த ஒரு மிகச் சிறிய இடைவெளியில் புக முயற்சித்து 6 முறை தோல்வியுற்றது. ஒவ்வொரு முறையும் தன்  அரை உடல் வீட்டின் உள்ளும், மீதம் வெளியிலும் இருக்க, உடல் மாட்டிக்கொண்டமையால், தன் முழு உடலையும் வெளியே எடுத்தது. ஆனால், 7வது முறை மிகவும் சிரமப்பட்டு உள் நுழைந்துவிட்டது. அதனை கண்ட என் அன்னை, "பார்த்தாயா அதனுடைய தாய்ப்பாசத்தை!", என்றார். நான், "உங்களுடைய தாய்ப்பாசமும் அதன் பாசத்திற்கு இணையானதே!" என்று நினைத்துக்கொண்டு, தலையசைத்தேன்.

"மனிதனே! நீ எவ்வளவு உயரம் சென்றாலும் உன் தாயை மறந்துவிடாதே!
ஏனென்றால், அவருக்கு ஈடு இணை எதுவும் இல்லை!"